செய்திகள்

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்: புகழேந்தி சொல்கிறார்

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் வர உள்ளனர் என்று கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் 2 மாதம் கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொன்னதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் இதுவரை வழி நடத்தி இருக்கலாம்.

ஆனால் இனிமேல் கட்சியை டி.டி.வி. தினகரன் தான் வழி நடத்துவார். பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று பார்த்து பேசிவிட்டு தனது சுற்றுப் பயண விவரங்களை டி.டி.வி. தினகரன் அறிவிக்க உள்ளார்.

எனவே எல்லோரும் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் யார் தலைமையில் மக்களிடம் செல்ல முடியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒப்பற்ற தலைவர் டி.டி.வி. தினகரன் தான்.

ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தட்டும். கட்சியை டி.டி.வி. தினகரன் பார்த்துக் கொள்வார். திவாகரும் நல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். இப்போது டி.டி.வி. தினகரனின் சுற்றுப் பயண அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

எனவே அமைச்சர் ஜெயக்குமார் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் வர உள்ளனர்.

சிறையில் இருக்கும் பொதுச் செயலாளர் சசிகலாவை தம்பிதுரை மட்டுமின்றி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணரெட்டி உள்பட 13 அமைச்சர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.

சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை பெறுவது தவறில்லை என்று உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளதால் மேலும் சில அமைச்சர்கள் சசிகலாவிடம் ஆலோசனை பெற வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.