செய்திகள்

விசாரணை கமி‌ஷன் அமைப்பதால் சபாநாயகரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்: புகழேந்தி பேட்டி

விசாரணை கமி‌ஷன் அமைப்பதால் சபாநாயகரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று புகழேந்தி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி வழங்கக் கூடாது. அவரது ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கக்கூடாது.

புரட்சித்தலைவி அம்மா மரணத்தில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இந்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமானால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஓ.பி.எஸ்சும் புதிய பதவியை ஏற்க கூடாது. அப்போதுதான் அம்மா மரணம் குறித்து விசாரணை நேர்மையாக நடைபெறும். மேலும் இந்த விசாரணை கமி‌ஷனில் 2 நீதிபதிகள் இடம் பெற வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் தாக்கப்பட்ட சபாநாயகர் தனபால் முதல்- அமைச்சராக வர தகுதியானவர்.

எனவே எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் பட்சத்தில் சபாநாயகர் தனபாலுக்கு முதல்- அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அம்மா சிகிச்சையில் இருந்தபோது ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். இருவரும் மருத்துவ மனையிலேயே இருந்தவர்கள்தான். இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

இந்த ஆட்சியை காப்பாற்ற 122 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்துள்ளனர். எனவே புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் பொழுது 122 பேரில் சிலரை தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.

தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைவதற்கு பதவியும் வழங்கி, பணமும் பெரிய அளவில் கைமாறி இருப்பதாக பேசப்படுகிறது. துபாய், சிங்கப்பூரில் இதற்கான பேரம் பெரும்அளவில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.