செய்திகள்

பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: புகழேந்தி பேட்டி

எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் நெத்திமேட்டில் வசித்து வருபவர் எஸ்.இ. வெங்கடாசலம். முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் தினகரன் அணியில் சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் கட்சி நிர்வாகி களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாதகாப் பட்டி உழவர் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார்.

இந்த துண்டு பிரசுரத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கர்நாடக மாநில அம்மா அணி செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தது.

அந்த துண்டு பிரசுரத்தில் நீட் தேர்வால் மாணவ- மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை விலக்குவதற்கு எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட தமிழக அரசுக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற்றிருந்ததால், இது தொடர்பாக அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றிருந்த அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம், எஸ்.இ. வெங்கடாசலம் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை எஸ்.இ. வெங்கடாசலம் உள்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கைதான எஸ்.இ. வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் தினகரன் அணியை சேர்ந்த நாங்கள் கடந்த 29-ந்தேதி சேலத்தில் துண்டுபிரசுரம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். இந்த செயலை அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி போலீசார் எங்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

தினரகன் அணியை சேர்ந்த எங்கள் மீது வேண்டும் என்றே அரசு எங்களின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இது போன்ற எத்தனை வழக்குகள் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.