செய்திகள்

சசிகலா குடும்பத்தினர் பற்றி யாரும் பேசக்கூடாது: கர்நாடக அ.தி.மு.க. செயலாளர் பாய்ச்சல்

சசிகலா குடும்பத்தினர் பற்றி பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறி உள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியே தேர்தல் கமி‌ஷனில் கேள்விக்குறியாக இருக்கும் போது அவர் நியமித்த நிர்வாகிகள் நியமனமும் கேள்விக்குறியாக இருக்கும் என்று தான் புத்திசாலித்தனமாக பேசுவது போல அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.

அவர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன் என்று தேர்தல் கமி‌ஷனில் கொடுத்த அபிடவிட்டில் கையெழுத்து போட்டுக்கொடுத்ததை மறந்து விடக்கூடாது. அவருக்கு வேண்டும் என்றால் ஞாபக மறதி வரலாம். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் ஞாபக மறதி வராது.

அதே போல அமைச்சர் உதயகுமார் அ.தி.மு.க.பொது செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக தினகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டதை இன்னும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகரிக்கவில்லை என்றும் புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்தது யாரை முன்னிலைபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது என்றும் கூறி உள்ளார்.

இவரும் அமைச்சர் ஜெயக்குமார் போல அபிடவிட்டில் கையெழுத்து போட்டு கொடுத்து உள்ளார். அமைச்சர் உதயகுமார் இடத்துக்கு தகுந்த மாதிரி பேசுவதில் வல்லவர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் யாருக்கோ விசுவாசமாக இருப்பது போல காட்டிக் கொண்டு தனது நிறத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்வார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் இனி மேலும் சசிகலா குடும்பத்தினர் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் அவர்கள் மாண்புமிகுக்களாக இருந்து முன்னாள் அமைச்சர்கள் என்ற நிலையை எட்ட வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்.

அவர்கள் தொடர்ந்து பேசினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். கட்சிப்பணிகளை தினகரன் வழிநடத்தி செல்கிறார். இதில் யாரும் குறுக்கிட முடியாது. ஆட்சிப் பணிகளை எடப்பாடி பழனிசாமி கவனிப்பார். ஆட்சிக்கும், கட்சிக்கும் முடிச்சு போட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.