புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை?- போலீஸ்காரர் ஏனாமுக்கு இடமாற்றம்

அந்த போலீஸ்காரர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் திருக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த போலீஸ்காரர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்ற மனநலம் குன்றிய இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றி கொண்டு மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பணியில் யாரும் இல்லாததால், அந்த இளம்பெண்ணை நோயாளிகள் அறையில் வைத்து வலுக்கட்டாயமாக போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அறையின் உள்ளே வந்த மருத்துவ அதிகாரி மனநலம் குன்றிய இளம்பெண்ணை போலீஸ்காரர்

வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்த போலீஸ்காரரை கண்டித்தூ சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் என்னையே கேள்வி கேட்கிறாயா? நான் அப்படி தான் செய்வேன் என கூறியுள்ளார். அந்த போலீஸ்காரர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதுகுறித்து அந்த மருத்துவ அதிகாரி திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை எடுக்கவில்லை. இதனால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என கருதிய மருத்துவ அதிகாரி உடனடியாக மருத்துவ கண்காணிப்பாளரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

மருத்துவ கண்காணிப்பாளர் திருக்கனூர் போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மருத்துவ கண்காணிப்பாளர் உடனே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலமாக புகார் அனுப்பியுள்ளார்.

இந்த தகவல் வெளியே தெரிந்தால் புதுவை காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என கருதி இரவோடு, இரவாக அந்த காவலரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏனாம் பிராந்திய ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யயப்பட்டார். இதற்கான உத்தரவை காவலதுறை தலைமையக எஸ்பி பிறப்பித்துள்ளார்.

இது குறித்து எஸ்பி மோகன்குமாரிடம் கேட்டபோது,

அந்த காவலர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார். மேலும், காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ் படிவதில்லை. மதிப்பதில்லை என்ற புகாரை திருக்கனூர் இன்ஸ்பெக்டர் காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பினார்.

அதன்பேரில் அந்த காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட காவலர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தகவல் புதிதாக உள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றார்.