புதுச்சேரியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
புதுச்சேரியில் நீண்டகாலமாக கோலோச்சி வந்த காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளும் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் யார் பெரிய கட்சி என்பதில் போட்டா போட்டி நிலவியது.
தி.மு.க. தலைமையை காங்கிரஸ் இறுதிவரை ஏற்க முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் தி.மு.க. தொகுதிகளை சமமாக பிரித்து கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை விட்டுத்தந்து போட்டியிடலாம் என சமரச பேச்சும் நடத்தியது. இதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கவில்லை.
இது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது. தற்போதைய சட்டசபையில் காங்கிரஸ் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே பெற்றுள்ளது. இதனிடையே தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க.வை காங்கிரஸ் ஏற்றுள்ளது.
அதோடு த.வெ.க.வுடன் கூட்டணி வரும் பாராளுமன்றம், 2031 சட்டமன்றம் தேர்தல் வரை நீடிக்கும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி உடைந்துள்ளது.
தற்போதைய சட்டசபையில் த.வெ.க.வுக்கு 2, கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்துக்கு 1 என 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டமன்றத்தை பொறுத்தவரையில் காங்கிரசை விட த.வெ.க.தான் பெரிய கட்சி. தமிழகத்தில் த.வெ.க. தலைமையை ஏற்றதுபோல புதுச்சேரியிலும் காங்கிரஸ் த.வெ.க. தலைமையை ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தெரியவரும்.