புதுச்சேரி காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அர்பணிப்புமிக்க சேவை மற்றும் ஒப்பற்ற தியாகத்தைப் பாராட்டி, இந்திய அரசின் மிக உயரிய விருதான ஜனாதிபதியின் கலர்ஸ் விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருதாக இது கருதப்படுகிறது. இந்த விருது புதுச்சேரி காவல்துறைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும்.
இந்த உயரிய விருதை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 25-ந் தேதி புதுச்சேரி வருவதாக இருந்தது. ஆனால் டெல்லியில் மாணவர்கள் போராட்டம் உச்சம் பெற்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கவும், புதுச்சேரி போலீசாரின் பிரமாண்ட அணி வகுப்புக்காககவும் புதுச்சேரி போலீஸ் மைதானம் தயாராகி வருகிறது.
பொதுப்பணி துறையினர் மைதானத்தின் முகப்புப் பகுதி, பார்வையாளர்கள் அரங்கம், அணி வகுப்புப் பாதைகளை அழகு படுத்தப்பட்டு வருகின்றன.
மைதான முகப்பில் இந்திய ஒற்றுமையின் அடையாளமான சர்தார் வல்லபாய் படேலின் கம்பீர உருவப் படமும், புதுச்சேரியின் பாரம்பரியமிக்க அதிகாரப்பூர்வ முத்திரையும் வரையப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, போலீஸ் மைதானம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விருதை மத்திய அமைச்சர் வழங்கிய பிறகு புதுச்சேரி காவலர்கள் அனைவரது சீருடையின் இடது கை சட்டைப் பகுதியில், ஜனாதிபதியின் வண்ணங்கள் பொறிக்கப்பட்ட பிரத்யேகப் பதக்கம் கம்பீரமாக இடம்பெறும்.