புதுச்சேரி

போக்குவரத்து விதிகளை மீறிய சட்டமன்ற உறுப்பினர் - அபராதம் விதித்து அதிரடி காட்டிய காவல் துறை

இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு வந்தார்.

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் தனது இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமலும், தலையில் ஹெல்மெட் அணியாமலும் வந்துள்ளார்.

அந்த வகையில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.-வுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தியில் சட்டமன்ற உறுப்பினர்:

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு வந்தார்.

தலைக்கவசம் அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவை வளாகம் வந்த எம்.எல்.ஏ.-விடம், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் ஓட்டுநர் நியமிக்கப்படாததை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் இவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது. எனினும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.