திருமாவளவன் 
புதுச்சேரி

தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்- திருமாவளவன் பேச்சு

மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு.

த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி உளுந்துார்பேட்டையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடக்கிறது.

இதையொட்டி கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

ஆட்சியில் பங்கு

சட்டசபை தேர்தலுக்கு முன்பும் பின்பும் விடுதலை சிறுத்தை கட்சியை இலக்காக வைத்து ஒரு சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிக்கு ஆதரவு கோரியும் ஒரு சில நாள்கள் கழித்துதான் ஆதரவு அளித்தோம். மேலும், ஆட்சியிலும் பங்கேற்றோம். இது தொடர்பாக விவாதித்து தான் விடுதலை சிறுத்தை கட்சி முடிவு எடுத்தது. இந்த ஜனநாயக மரபை விடுதலை சிறுத்தை கட்சி பின்பற்றுகிறது என்ற அணுமுறையைக் கூட ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. சரியான முடிவைதான் விடுதலை சிறுத்தை கட்சி எடுத்திருக்கிறது.

பஞ்சு மிட்டாய் தலைவர்கள்

மேலும் சமகாலத்தில் இயக்கம் கண்டவர்கள் வேறு ஒரு கட்சியில் கரைந்து போய்விட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் தலித் தலைவர்களை பஞ்சு மிட்டாய் தலைவர்கள் என்று கூறுவார். பஞ்சு மிட்டாய் பார்க்க பெரிய பிம்பமாகத் தெரியும். ஆனால் ஒன்றுமில்லாமல் இருக்கும். அதுபோன்றது அல்ல விடுதலை சிறுத்தை கட்சி.

நாங்கள் காரணம்

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. 60 பேருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சி 3 பேருக்குதான் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அதை பெரிதாக்கி இந்த கட்சியை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். அது பலிக்கவில்லை. மேலும், தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு விடுதலை சிறுத்தை கட்சி தான் காரணம். இதற்கு ஆதாரம் இருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு 47 இடங்கள்தான் கிடைத்தன. அந்த கட்சிக்கு சுமார் 20 இடங்கள் இழப்பு. நாம் தமிழர் கட்சிக்கு 8 சதத்திலிருந்து 4 சதம்தான் வாக்கு கிடைத்தது. பா.ஜனதா 11.5 சதத்திலிருந்து 2.5 சதமாகக் குறைந்துவிட்டது. எல்லோருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் யாரும் பேசவில்லை. த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.

தடை ஏன் கோரவில்லை

டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களைச் சந்தித்து ஏன் நாடு முழுவதும் நீட் தேர்வுக்குத்தடை கோரவில்லை என்று கேட்டதற்கு, அடுத்த நகர்வு என்று சொன்னார்கள்.

முதலில் இருந்தே இந்தத் தேர்வு முறையே வேண்டாம் என்று கூறிவரும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி. இந்த நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. அது போன்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயரை மாற்றியது இந்த பா.ஜனதா அரசு. அப்படியென்றால் நீட் தேர்வை இந்த பா.ஜனதா அரசு ஒழிக்க வேண்டியதுதானே. பாஜக அதைச் செய்யாது, அதில் சுகம் கண்டுவிட்டது.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

கூட்டத்தில், ரவிக்குமார் எம்.பி. , முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், புதுவை முதன்மைச் செயலர் அரிமா தமிழன் உட்பட பலர் பேசினர். விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.