புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடக்கிறது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள், ஐந்துமுனை போட்டி நிலவுகிறது, போலீஸ் பாதுகாப்புடன் வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து தாக்கல் செய்ய தயாராகின்றனர்.

5 முனை போட்டி

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. வேட்பாளராக சேது செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக சலீம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரக கார்த்திக் குமாரி ஆகியோர் அறிவிக்கப்பட் டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட உள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மனுதாக்கல் செய்யவில்லை

ஆனால் தொடக்க நாட்களான 9,10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களோ யாரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

கடந்த 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை. இருப்பினும் வேட்புமனு படிவங்களை வேட்பாளர்கள் பெற்று, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

குலதெய்வ கோவிலில் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தங்களின் குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இன்றும் அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

நாளை மனு தாக்கல்

நாளை நல்ல நாள் என்பதால் நட்சத்திரம், நேரம் பார்த்து ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

வேட்புமனு பெறப்படும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தேர்தலில் போட்டியிடும் பொது பிரிவு வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளின் படி, செல்லு படியாகும் ஓட்டுகளில் 6-ல் ஒரு பங்கை பெற தவறினால் வேட்பாளர்கள் செலுத்திய இந்த வைப்புத் தொகை (டெபாசிட்) திருப்பித் தரப்படாது. மனு தாக்கல் நாளை மாலை 3 மணி யுடன் நிறைவு பெறுகிறது.

வேட்புமனு பரிசீலனை

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 17-ந் தேதி காலை 11 மணிக்கு தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் நடக்கிறது.

தேர்தல் விதிகளின்படி வேட்பாளர்களும், அவர்களின் தகுதியுடைய பிரதிநிதிகளும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஏற்கப்பட்ட வேட்பாளர்களில், போட்டியிட விரும்பாமல் மனுவை திரும்பப் பெற விரும்புபவர்களை வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்குள் அதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் சின்னம்

தட்டாஞ்சாவடி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலுவிடம் இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும்.

மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT