புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டில் தீ விபத்து- புகை மூட்டத்தில் சிக்கிய போலீஸ் குடும்பம்

வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

மாலை மலர்

புதுச்சேரி:

சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.

புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.