முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகதான் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி கிடைக்கும்போது கொண்டாட்டத்துக்குக் காரணமாக இருக்கும் தோல்விக்கான பொறுப்பை நானும் ஏற்றுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி ஊழலில் ஈடுபட்டபோதும் பண பலம், அதிகார பலத்தால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியைப் பலப்படுத்தும் கடமையும் பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. புதுச்சேரியில் புதியதாக அமைந்துள்ள ஆட்சியை 6 மாதத்துக்கு விமர்சனம் செய்யமாட்டோம்.
மத்தியில் இருக்கும் பாஜக அரசு மக்கள் விரோத போக்கில் தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதி வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு புதுச்சேரியில் கடந்த என்.ஆர்,.காங்கிரஸ், பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
இப்போது இக்கொள்கையின் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் பிரெஞ்சு பாடத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்திய பிரெஞ்சு உறவு அடிப்படையில் புதுச்சேரியில் பிரெஞ்சு பாடத்தை மாணவர்கள் விரும்பிப் படித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் முதல்வர் ரங்கசாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.
உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி பிரெஞ்சு மொழி புதுச்சேரியில் தொடர முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழுக்குதான் முதலிடம் கொடுத்திருக்க வேண்டும்.
புதுச்சேரி அமைச்சரவையில் முதல்வர் உள்பட 3 பேர்தான் இப்போது பதவியேற்றுள்ளனர். இன்னும் 3 பேர் பதவி ஏற்காமல் காலதாமதம் ஏற்பட என்ன காரணம்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கிரீஷ்சோடங்கர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில்தான் தோல்விக்குப் பிறகு கட்சியைப் பலத்தப்படுத்தும் நடவடிக்கை இருக்கும். அதேபோன்று தவெகவுடன் புதுச்சேரியில் இப்போது கூட்டணி ஏற்படுமா என்பது குறித்தும் அந்தக் குழுதான் முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.