புதுச்சேரி

‘புதுவை அரசின் முழு ஆதரவுடன் போலி மருந்து உற்பத்தி நடைபெறுகிறது’ - வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

போலி மருந்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை நடத்துகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“நீட் வினாத்தாள் கசிவு ஏராளமான இடங்களில் நடந்துள்ளது. நடப்பு ஆண்டு மட்டும் 25 குழந்தைகளை இழந்துள்ளோம். பயிற்சி மையங்கள் கொள்ளை அடிக்கின்றன. நீட் வினாத்தாள்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தோருக்கு அதிகமாக கிடைக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதுடன் விசாரணை அமைக்க கோருவோம். புதுச்சேரியில் ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து அரிசி விநியோகம் சரியாக நடக்க வேண்டும். தற்போதுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டும்.

மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறார்கள். இதற்கான தொகையை பயனீட்டாளர்களிடம் வசூலிக்க உள்ளார்களா? மின்துறையை தனியாரிடம் தரப்போகிறார்களா என்பதை முதல் அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

தனியாரிடம் தர முதல் கட்ட நடவடிக்கை எடுக்கிறீர்களா என்பதற்கு ஆளுநர் பதில் தர வேண்டும். புஷ்கரணி விழா புதுச்சேரி திருக்காஞ்சியில் கொண்டாட வேண்டும். இங்கு நடத்தாமல் ஏனாமில் நடத்த கொண்டு செல்கிறார்கள். இதற்காக மத்திய அரசு ஒதுக்குவதாக தெரிவித்துள்ள ரூ. 48 கோடியை புதுச்சேரியில் பயன்படுத்த வேண்டும்.

திருக்காஞ்சியில் ரூ. 200 கோடி அளவுக்கு பெரிய விழாவாக புஷ்கர் விழா நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்துக்களை புதுச்சேரி அரசு ஏமாற்றுவதாக அர்த்தம்.

போலி மருந்து தொழிற்சாலை நடத்தி கைதாவோர் புதுச்சேரியில் உடனடியாக விடுவிக்கப் படுகிறார்கள். கடந்த முறை சிபிசிஐடி நன்றாக வேலை செய்த நிலையில் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

சிபிஐக்குக்கு லஞ்சம் தர முயன்றோர், உடன் சென்ற போலீஸ்காரர், பின்னால் இருக்கும் அரசியல்வாதி, எம்எல்ஏ யார் என்பதை வெளியிடவேண்டும். புதுச்சேரி அரசு முழு ஆதரவுடன் போலி மருந்து உற்பத்தி, கடத்தல் நடக்கிறது. போலி மருந்து வெளிமாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கையை அந்த அரசு எடுக்கும்.

அடுத்த தேர்தலே தேவையில்லை. முதல் அமைச்சருக்கு மட்டும் தேர்தல் வைத்தால் போதும். அவரே அனைத்தும் வைத்து கொள்வார். அனைத்து அதிகாரங்களும் தனக்கு வேண்டும் என முதல் அமைச்சர் நினைக்கிறார்.

புதுவையில் ரங்கசாமியின் காட்டு தர்பார்தான் நடக்கிறது. இதற்கு மக்கள்தான் முடிவு கட்ட வேண்டும்.” எனக் கூறினார்.

தொடர்ந்து பாஜகவுடன் - திமுக கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்கிறார்களே என கேட்டதற்கு, “அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். முதலில் வெளியே வரட்டும் அதன்பிறகு தெரியும். திமுக ஆதரவோடு புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையுமா என்று கேள்வி கேளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் புதுச்சேரியில்தான் முதலில் இதுபோல் அமையும்” என்றார்.

புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணி இருக்குமா என கேட்டதற்கு, “நிலைப்பாடு பின்னர் தெரிவிக்கப்படும். பேச்சு வார்த்தைக்கு பிறகு தெரியும். நட்பு போட்டி நிச்சயம் இருக்காது” என்றார்.

பேட்டியின்போது எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக எம்எல்ஏ கார்த்திகேயன் வருகைக்காக ஒரு மணி நேரம் வரை வைத்திலிங்கம் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.