தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழக தேர்தலையொட்டி மதுகடத்தலை தடுக்க அண்டை மாநிலமான புதுச்சேரியில் 3 நாட்கள் கள்ளு, சாராயம் மற்றும் மதுகடைகள் மூடப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணிக்கு கலால்துறையினர் மதுக்கடைகள் மூடி சீல் வைத்தனர்.
மேலும் புதுவையில் இருந்து தமிழகப்பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்த முயற்சித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி திருக்கனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணலிப்பட்டை சேர்ந்த முத்துக்கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 19 ஆயிரத்து 304 மதிப்புள்ள மதுபாட்டில்களையும் பாகூர் போலீசார் கொம்பந்தான்மேடு பகுதியில் மடுகரையை சேர்ந்த கார்த்தியை கைது செய்து ரூ. 3020 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேல்பரிக்கல் பட்டு பகுதியில் ரஞ்சித் (25), சரபாலா (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1130 மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1750 ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம் பகுதியில் சக்கரபாணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 32 லிட்டர் சாராயம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் வில்லியனூரில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்த செந்தில்(40), உருளையன்பேட்டை பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்த குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டு மொத்தமாக புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்த முயன்ற மற்றும் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.