புதுச்சேரியில் கலால் விதிகளை மீறி, சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்ட மதுபான கடைகள் மீது கலால் துறை நடவடிக்கை எடுத்தது. ஒரு பீர் வாங்கினால் மற்றொரு பீர் இலவசம் என அறிவித்த மதுபான கடைகள் மற்றும் ரெஸ்டோபார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுச்சேரியில் கலால் விதிகளின்படி, உரிமம் பெற்றவர்கள் தங்களது சொந்த இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் மூலம் குறிப்பிட்ட பிராண்டு மதுபானங்களையும், தங்கள் உரிமம் பெற்ற இடத்தையும் அறிவிப்பு வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சமீப காலமாக, இந்த விதிகளை மீறி சில மதுபான கடைகள் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுவது கலால் துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கலால் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், கருவடிக்குப் பத்தில் இயங்கி வரும் ஒரு மதுபான கடை மற்றும் நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலையில் உள்ள ரெஸ்டோபார், கலால் விதிகளை மீறி சமூக வலைதளங்களில் ஒரு பீர் வாங்கினால் மற்றொரு பீர் இலவசம், 3 பீர் வாங்கினால் உணவு இலவசம் என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிப்பு வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுபானகடை மற்றும் ரெஸ்டோபாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.