கடல் ஆமைகள் கடல் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக கடலில் காணப்படும் கடல் புல்வெளி வளர்ச்சியைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் கடல் சூழலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பவளப் பாறைகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணைபுரியவும் செய்கின்றன.
அதேபோன்று சில வகையான கடல் ஆமைகள் ஜெல்லிமீன்களை உணவாக உட்கொள்கின்றன. ஜெல்லிமீன்கள் அதிக அளவில் பெருகும்போது, அவை மீன்களின் முட்டைகளையும் குஞ்சுகளையும் உண்பதால் மீன்களின் எண்ணிக்கை குறையக்கூடும். கடல் ஆமைகள் ஜெல்லிமீன்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல் உணவு சங்கிலியின் சமநிலையைப் பேண உதவுகின்றன.
உலகில் தோணி ஆமை, பச்சை ஆமை, பருந்து அல்லது கிளி மூக்கு ஆமை, சிற்றாமை அல்லது பங்குனி ஆமை, நீண்ட கழுத்து ஆமை,தட்டை ஆமை, சேற்று ஆமை என 7 வகை ஆமைகள் உள்ளது. இவற்றில் குறிப்பாக ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் புதுவை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிடுகின்றன. வனத்துறையினர் கடற்கரைகளில் காணப்படும் ஆமை முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து, அவற்றை பராமரிக்கின்றனர். சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் முட்டைகள் பொரிந்து, ஆமைக்குஞ்சுகள் வெளிவருகின்றன. பின்னர் வனத்துறையினர் அவற்றைப் பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கடல் ஆமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் பொறுப்பாகும். ஆனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் கடல் ஆமைகள் இறந்த நிலையில் கடற்கரைகளில் ஒதுங்குகின்றன. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடலில் அதிக அளவில் காணப்படும் பிளாஸ்டிக் நெகிழிக் கழிவுகளாகும். கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளை ஜெல்லிமீன்கள் எனத் தவறாக நினைத்து உண்பதால், அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.
அதேபோன்று, மீன்பிடி வலைகளில் சிக்குவதாலும் பல கடல் ஆமைகள் உயிரிழக்கின்றன.எனவே கடலில் நெகிழிக் கழிவுகள் சேர்வதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் கடல் ஆமைகளை மட்டுமல்லாமல், கடல் உயிரினங்களையும், கடல் வளத்தையும் பாதுகாக்க முடியும்.
இதனை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புதுவை முருங்கம்பாக்கத்தில் அரசின் கலை கைவினை கிராமத்தில் வனவிளங்குகள் கலை மையத்தில் இயக்குனர் பூபேஷ்குப்தா தலைமையிலான குழுவினர் கடல் ஆமைச் சிற்பங்களை உருவாக்கி, பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக இவை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அப்போது அனைவரது வரவேற்பையும் பெற்றது. கலை மற்றும் சிற்பங்கள் மூலம் கடல் ஆமைகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்பதே முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என குழுவினர் தெரிவித்தனர்.