புதுச்சேரி

கனமழை - புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

வருகிற 26-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உளள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 15-ந்தேதி முதல் மழை பெய்து வரும் சூழலில், வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இதுமட்டுமல்லாமல், வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்றும், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் ஏற்கனவே ஆய்வு மையம் விளக்கம் அளித்திருக்கிறது.

புதுவை, காரைக்காலில் கனமழை

இதன் காரணமாக வருகிற 26-ந்தேதி வரை (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

வானிலை ஆய்வு மையம்

அதாவது 29 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் விடுமுறை

இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காஞ்சிபுரத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கனமழை பெய்து வருவதால் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT