சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி கோரிமேடு இந்திராநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் பினோத் நவீல்சன் (வயது31). டாக்டரான இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜென்சி பிரிஸ்கில்லா (29) கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவன மையத்தில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
வீட்டின் தரைத்தளத்தில் பினோத் நவீல்சனின் பெற்றோரும், முதல் தளத்தில் பினோத் நவீல்சன், மனைவி மற்றும் குழந்தையுடன் வசிக்கின்றனர். 2-வது தளத்தில் விஷ்ணு என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பினோத் நவீல்சன் பெற்றோருடன் நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு சென்றார். ஜென்சி பிரிஸ்கில்லா, குழந்தையுடன் விழுப்புரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் பினோத் நவீல்சனுக்கு அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் விஷ்ணு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்தார். உடனே அவர் இதுகுறித்து தனது மனைவியிடம் கூறினார். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அறையில் இருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். டாக்டர் தம்பதியர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.