கைது 
புதுச்சேரி

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.33¾ லட்சம் மோசடி- சென்னை இடைத்தரகர் கைது

பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வங்கியில் கடன் வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார். எனவே கோவிந்தராஜ் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயன்றார்.

புதுச்சேரி ராஜீவ்காந்தி நகர் தமிழ்மகள் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வீட்டு மனைகள் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு சென்னை கூடுவாஞ்சேரியில் ஒரு இடத்தை வாங்க முயற்சி செய்தார். அப்போது அவருக்கு இடைத்தரகர் காளிதாஸ் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.

தொடர்ந்து அந்த இடத்தை வாங்குவது தொடர்பாக இருவரும் அடிக்கடி பேசிவந்தனர். அப்போது அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும். அதற்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக காளிதாஸ் கூறியுள்ளார். மேலும் அதற்கு பணம் செலவாகும் என்று கூறினார்.

மோசடி

இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு வங்கி கடன் வாங்குவதற்காக ரூ.33 லட்சத்து 75 ஆயிரம் காளிதாசிடம் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வங்கியில் கடன் வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார். எனவே கோவிந்தராஜ் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியவில்லை.

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் கடந்த 2023-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைது

அப்போது காளிதாஸ் மதுரையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாபுஜி தலைமையிலான

போலீசார் மதுரையில் முகாமிட்டு காளிதாசை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.