புதுச்சேரியில் 72 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், வீடு வாடகைக்கு பார்ப்பது போல் வந்த பெண், 26 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றார். போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது72). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ஜெயலட்சுமி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தனது வீட்டில் உள்ள 2 மாடிகளை வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, ஸ்கூட்டியில் வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீடு வாடகைக்கு வேண்டும் எனக்கூறி விசாரித்துள்ளார்.
இதையடுத்து ஜெயலட்சுமி வீட்டின் மாடிசாவியை கொடுத்து, மேலே சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அப்பெண் தனது கணவர் வந்ததும் இருவரும் சேர்ந்து வீட்டை பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு, ஜெயலட்சுமி அருகிலேயே அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, சர்க்கரை நோய்க்கான மாத்திரையை முன்னதாக சாப்பிட்டிருந்த ஜெயலட்சுமி தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, ஜெயலட்சுமியை எழுப்பிய அப்பெண், வீட்டின் சாவியை கொடுத்து விட்டு பின்னர் வந்து வீட்டை பார்த்துக் கொள்வதாக கூறி சென்றார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த ஜெயலட்சுமி, அங்கிருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 26 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் தனது மகள் வச்சுலாவுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்த வச்சுலா விசாரித்தபோது வீடு பார்க்க வந்த பெண் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெயலட்சுமி ரெட்டியார்பாளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.