ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம், 3 மாதம் லைசென்ஸ் ரத்து என்ற சட்டம் இருந்தும், மக்கள் கேட்பதில்லை.
புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றாததால் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களால் தான் விபத்து அதிகம் ஏற்படுகிறது. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிய பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக புதுச்சேரி - வில்லியனூர் பகுதியில் உள்ள கூடப்பாக்கம் 4 முனை முக்கிய சந்திப்பாகும். இது வில்லியனூர், பாகூர், கடலூர், புதுச்சேரி நகரம் என 4 திசைகளில் இருந்தும் வாகனங்கள் வந்து சேரும் பரபரப்பான சந்திப்பாகும். காலை, மாலை நேரங்களில் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இந்த சந்திப்பில் தான் வில்லியனூர் சரக போக்குவரத்து போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ராட்சச ரோபோ தனது கையில் ஹெல்மெட்டை உயரமாக தூக்கிப் பிடித்தபடி, வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை சைகையால் வலியுறுத்தியது.
அதோடு சில நடன அசைவுகளோடு, கைகளை அசைத்து தலையை ஆட்டி மக்களை கவர்ந்தது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அதைப் பார்த்து ரசித்தனர். மேலும், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சிக்னலில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டது. கைகளால் சைகை காட்டி வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தது.
ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம், 3 மாதம் லைசென்ஸ் ரத்து என்ற சட்டம் இருந்தும், மக்கள் கேட்பதில்லை. அபராதம் போட்டால் கோபம் வருகிறது. அதனால் தான் போலீசார் இப்போது அபராதம் வேண்டாம், அன்பாக சொல்லலாம் என்று ரோபோவை களத்தில் இறக்கியுள்ளனர்.
இது புதுவையில் ரோபோவின் முதல் வருகை அல்ல. கடந்த 2018-ல் புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக காவல் சிங்கம் என்ற ரோபோவை புதுச்சேரி போலீஸ் அறிமுகப்படுத்தியது. அது சுற்றுலா தலங்கள், வழி, காவல்துறை அதிகாரிகள் விவரங்களை தொடுதிரையில் காட்டியது. தற்போது அதே ரோபோ ஐடியா, சிக்னலுக்கு வந்து விட்டது.