புதுச்சேரி

புதுச்சேரி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி: விரைவில் புதிய அரசு அமைகிறது

பாஜகவுக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தொடராமல் உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 12 , பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 என 18 இடங்களை கைப்பற்றினர். புதுச்சேரியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 16 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர்வது உறுதியாகியுள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் 15வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமியின் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜகவுக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தொடராமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்-அமைச்சர் ரங்கசாமி சேலத்தில் தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு வென்ற எம்எல்ஏக்கள் சான்றிதழ்களை வைத்து பூஜை செய்து புதுச்சேரி திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தார். அங்கு கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களை பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

வருகிற அமாவாசை நாளான 16-ந்தேதி அல்லது அதற்கு அடுத்த தினங்களில் 5-வது முறையாக பதவியேற்க உள்ளார்.