புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைதேர்தல் : நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 26,734 வாக்காளர்களுக்கு கியூ கார்டுடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த 7-ந்தேதி அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

11 பேர் போட்டி

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேட்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், தி.மு.க. வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

வாகன பேரணி

இறுதிகட்ட பிரசாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் மோட்டார் சைக்கிள் வாகன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 நாட்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குபதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை தேர்தல் துறை விரிவாக செய்துள்ளது.

தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், 3-ம் பாலினத்தவர் 5 பேர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்கும்.

புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 26,734 வாக்காளர்களுக்கு கியூ கார்டுடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

140 வாக்கு பதிவு எந்திரங்கள்

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த தலா 46 வாக்கு பதிவு மற்றும் கட்டுபாட்டு எந்திரங்களும், 48 விவிபாட் எந்திரங்கள் என 140 வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை முடித்து பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. எந்திரங்கள் 31 வாக்கு சாவடிகளுக்கும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு பணிக்காக அரசு ஊழியர்கள் 148 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 31 வாக்குச்சாவடிகளுக்கு தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள் 1, 2, 3 என பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

85 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலான மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க அவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டது. அதன்படி 67 மற்றும் 37 வாக்காளர்கள் வீட்டிலிருந்த படி வாக்களித்துள்ளனர்.

மதுபான கடைகள் மூட உத்தரவு

மேலும் நாளை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு 2 தினங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள ஒ.ஆர்.எஸ். திரவமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்குகிறது

வாக்குசாவடிகளுக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைகிறது.

அனைத்து வாக்கு சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

SCROLL FOR NEXT