புதுச்சேரி வாலிபர் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
புதுவை வாணரப்பேட்டை, ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது30). இவருக்கு திருமணமாகி சுயம்பு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவரது மனைவி, பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2-ந் தேதி இரவு தமிழ்ச்செல்வன், நேதாஜி நகரில் இருந்து கல்லறை வீதி வழியாக பைக்கில் சென்றபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ் செல்வனை வெட்டி கொன்ற கும்பல் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கொலை நடந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததாலும் அப்பகுதியில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்படாததாலும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது.
இந்த நிலையில் தமிழ்செல்வனை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தமிழ்செல்வனை முன் விரோதத்தில் வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.