புதுச்சேரி

புதுச்சேரியில் பழிக்கு பழியாக ரவுடியை வெட்டிக் கொன்ற கும்பல்

முரளியின் நண்பர்கள் 4 பேரும் வில்லியனூர் போலீஸ் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அரும்பார்த்த புரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ரவுடி முரளி (வயது 26) பெயிண்டர். ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

வெட்டிக் கொலை

இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் 5 பேருடன் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டில் தனியார் மனை பிரிவு பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், முரளியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்ததும் முரளியின் நண்பர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் முரளி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். முரளி இறந்து போனது உறுதி செய்த பின்னரே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

பழிக்கு பழியாக

இதுகுறித்து முரளியின் நண்பர்கள் 4 பேரும் வில்லியனூர் போலீஸ் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக முரளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து கொலைகள்

புதுச்சேரியில் கடந்த 2-ந்தேதி வாணரப்பேட்டையில் தமிழ்செல்வன் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 6-ந் தேதி லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியில் பவித்ரன் என்ற வாலிபரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது.

நேற்று முன்தினம் காலை பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவில் குமரகுருபள்ளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத், குத்தி கொலை செய்யப்பட்டார். நேற்று ரவுடி முரளி வில்லியனூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுபோன்று புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT