ஜிப்மர்
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

கடந்த 1½ ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமிக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மர் குழந்தைகள் மருத்துவத் துறை, பல்துறை நிபுணர் குழுவின் கூட்டு முயற்சியுடன் 11-வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 1½ ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமிக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தாயும், சிறுமியும் நலமாக குணமடைந்து வருகின்றனர்.

ஜிப்மரில் ஏற்கனவே பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கான முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும்.

இது குறித்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி கூறுகையில், "குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்த மருத்துவத் திறன் தேவைப்படுகிறது. இந்த வெற்றிகரமான சிகிச்சை எங்கள் மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும், குழுப் பணியையும் பிரதி பலிக்கிறது. இந்த அனுபவம் நிலையான குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை உருவாக்க வழிவகுக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT