புதுச்சேரி

ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்கள் குறைப்பு- புதுச்சேரியில் அரசாணை வெளியீடு

தகுதி மதிப்பெண்களை குறைக்குமாறு பல்வேறு ஆசிரியர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

பணி நியமனம், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்களை குறைத்து புதுவை அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதிப்பெண்கள் குறைப்பு

பொதுப்பிரிவினர் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் எம்.பி.சி., ஓ.பி.சி., இ.பி.சி., பி.சி.எம். பிரிவினருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 82 மதிப்பெண் என்ற நிலையில் இருந்து 75ஆக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., பி.டி., எஸ்.டி. மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 75 மதிப்பெண்ணுக்கு பதிலாக 60 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுவை பள்ளிக்கல்வித்துறையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமனம் செய்ய, சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா அரசுகள் நடத்தும் டெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி முக்கியம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தகுதி மதிப்பெண்களை குறைக்குமாறு பல்வேறு ஆசிரியர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட விதிகளுக்கு இணையாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா அல்லது மத்திய டெட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்களை பெற்ற ஆசிரியர்கள், புதுவையில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT