புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி 2024 மார்ச் 2ந்தேதி, வீட்டின் அருகே விளையாடியபோது மாயமனார்.
முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 2 நாட்கள் கழித்து மாயமான சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு, கை, கால்களை கயிற்றால் கட்டி, உடலை வேஷ்டியில் சுற்றி கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டிருந்தார்.
சிறுமியின் உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமி மாயமான வழக்கு, இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), 363 (கடத்தல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), 201 (குற்றத்திற்கான சாட்சிகளை மறைத்தல்), போக்சோ பிரிவு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த, கஞ்சா போதைக்கு அடிமையான முத்தியால்பேட்டை சோலை நகர், அம்பேத்கர் நகர் 2வது குறுக்கு தெரு முனுசாமி மகன் கருணா என்ற கருணாஸ்(18), முத்தியால்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன்(56) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விவேகானந்தன் 2024 செப்டம்பர் 16ந் தேதி சிறையில் இருந்த கழிப்பறை அருகே உள்ள இரும்பு கம்பியில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் 560 பக்க குற்ற பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ந் தேதி நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணா குற்றவாளி என அறிவித்தார். கடந்த 5-ந்தேதி இரு தரப்பு வாதம் நடந்தது. அரசு தரப்பு வக்கீல் பச்சையப்பன், சிறுமி குடும்பத்தின் வக்கீல் பிரவீன் ஆகியோர், 20 பக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை முன் வைத்தனர். அப்போது, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என 10 விதமான மேற்கோள்களை சுட்டிக்காட்டினர்.
நீதிபதி சுமதி, அரசு சமூகநலத்துறை மூலம் அவரின் குடும்ப பின்னணி குறித்தும், அவர் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா? என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். நேற்று முன்தினம் சமூக நலத்துறை மூலம் குற்றவாளி பற்றிய குடும்ப பின்புலம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, இரு தரப்பு வக்கீல்களின் இறுதி வாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு தீர்ப்புக்காக இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை போக்சோ விரைவு கோர்ட்டு நீதிபதி, குற்றவாளி கருணா என்ற கருணாசுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
புதுவை வரலாற்றில் முதல்முறையாக போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணா என்ற கருணாஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.