புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்த 2022-23 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மும்மொழிக் மொழித் கொள்கையின்படி மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவின் பூர்விக மொழிகளாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
இந்தக் கெடுபிடியால், புதுச்சேரியின் பாரம்பரியத்தில் வேரூன்றிய பிரெஞ்சு மொழியை மாணவர்கள் கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
சிபிஎஸ்இயின் இந்த புதிய உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரி எதிர்க்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இது "பிரெஞ்சு மொழியை அழித்து, இந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சி" என்று கூறி போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், பிரெஞ்சு மொழியை 'வட்டார மொழி'யாக அங்கீகரிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மே 25 அன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரெஞ்சு மொழிக் கல்வியைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அவரது கடிதத்தில், "சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் R3 பிரிவின் கீழ், பிரெஞ்சு மொழியை புதுச்சேரிக்கான ஒரு 'வட்டார மொழி'யாகக் கருதி சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பிரெஞ்சு என்பது புதுச்சேரியைப் பொறுத்தவரை வெறும் 'அந்நிய மொழி' அல்ல. அது பிரான்ஸ் நாட்டுடனான நீண்ட காலத் தொடர்புகளின் மூலம் உருவான புதுச்சேரியின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தின் அங்கமாகும்.
புதுச்சேரியில் வசிக்கும் பலர் இன்றும் பிரான்ஸ் நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றனர். பலர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களாகவும், பிரான்ஸ் தேர்தல்களில் பங்கேற்பவர்களாகவும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளிடம் இருந்து பிரெஞ்சு மொழிக் கல்வியைத் தொடரக் கோரி தனக்கு ஏராளமான மனுக்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ரங்கசாமி, தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கங்களைச் சிதைக்காமல், புதுச்சேரியின் தனித்துவமான மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு சமநிலையான தீர்வை மத்தியக் கல்வி அமைச்சகம் விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.