கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் பகுதியில் அமைந்துள்ள அழுக்குச்சாமி சித்தர் ஜீவ சமாதி உள்ளது.
இந்த கோவிலின் 107-வது ஆண்டு குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். குருபூஜையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்க நேற்று இரவு வந்தார். அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி சித்தரின் ஜீவ சமாதியில் மனமுருகி நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்தார்.
கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் அங்கு கூடியிருந்த சன்னியாசிகளுக்கு 1000 போர்வைகள் வழங்கினார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி, குரு பூஜைக்காக வந்துள்ளோம். குருவை தரிசித்தோம். நல்ல தரிசனம் என்றார்.
அவரிடம் தமிழக த.வெ.க ஆட்சி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, நல்லது இல்லை என கூறி, சுருக்கமாக பேட்டியை முடித்து சென்றார்.
தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கட்சி தொடங்குவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசனை பெற்றார். அரசியலில் எப்படி செயல்பட வேண்டும், தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி வழிகாட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிர முருகபக்தர். ஆண்டுக்கு 2 முறை திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்வார். அதோடு புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமியின் தீவிர பக்தர்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தீபம் ஏற்றப்பட வில்லை இது முருக, பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
முருக பக்தரான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு, திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் தீபம் ஏற்றாதது அதிருப்தியையும், வேதனை யையும் ஏற்படுத்தி இருக்கலாம். அதன் வெளிப்பாடாக தான் அவர் “த.வெ.க ஆட்சி நல்லது இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.