புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களை வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி.
அதனைத்தொடர்ந்து நிரூபர்களுக்கு பேட்டியளித்த அவர்.,
“நம்முடைய மீனவ சமுதாய மக்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக இன்று செல்கின்றனர். இதற்காக அவர்களை வாழ்த்தி, பூஜை படைத்து அனுப்பி வைத்திருக்கிறோம். இந்த ஆண்டு எந்தவித பிரச்சனையும், சங்கடமும் இல்லாமல் அவர்களுடைய தொழில் சிறப்படைய என்னுடைய வாழ்த்துக்கள்.
அதிகமான மீன்களை பிடித்து, நல்ல வியாபாரம் செய்து, அவர்கள் தொழில் நல்ல சிறப்படையவும், வருமானம் உயர வேண்டும். அதன் மூலமாக நம்முடைய பொருளாதாரம் உயர வேண்டும். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து புதுவை சட்டமன்றம் எப்போது கூடும் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் சட்டசபை நாளை கூடுகிறது. புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்ற பிறகு, ஆகஸ்டு மாதம சட்டப்பேரவையை கூட்டுவோம். எப்போது கூட்ட வேண்டுமோ அப்போது கூட்டுவோம் என்றார்.
நிரந்தர சபாநாயகர் நியமனம் எப்போது? என்ற கேள்விக்கு, அரசு பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, அதன் அடிப்படையில் முடிவு எடுத்து நியமனங்கள் போடப்படும்.” என தெரிவித்தார்.