புதுச்சேரி

புதுச்சேரி: வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை, காரைக்கால், மாகி, ஏனாமில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு ஆயிரத்து 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதானது. இதனால் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக செயல்படாத 5 வாக்குப்பதிவு எந்திரம், 10 கட்டுப்பாட்டு எந்திரம், 46 வி.வி.பாட் எந்திரம் ஆகியவை மாற்றப்பட்டது.

தொடர்ந்து நடந்த ஓட்டுப்பதிவின்போது சரிவர இயங்காத 8 வாக்குப்பதிவு எந்திரங்கள், 8 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 42 விவிபாட் எந்திரங்களை மாற்றி தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் திருவிழா போல வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கை செலுத்தினர். வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காலையில் அதிகளவில் கூட்டம் இருந்தது.

இதனால் காலை 9 மணி அளவிலேயே 20 சதவீதம் வாக்குகள் பதிவானது. மதியம் ஒரு மணியளவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு பிறகும் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குகள் பதியப்பட்டது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் 89.87 சதவீத வாக்குகள் பதிவானது. தபால் ஓட்டுகள் 1.36 சதவீதத்தையும் சேர்த்தால், 91.23 சதவீதமாக புதுவையில் வாக்குப்பதிவு உயர்ந்தது. இந்த வாக்குப்பதிவு புதுவை தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. புதுவை வாக்குப்பதிவு எந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

காரைக்காலில் அரசு கலைக்கல்லூரியிலும், ஏனாமில் அரசு உயர்நிலை பள்ளியிலும், மாகியில் அரசு கல்லூரியிலும் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. புதுச்சேரியில் நள்ளிரவு வரை வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணி நடந்தது.

ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் எந்திரங்கள் வைக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் தொகுதி

வாரியாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பும், 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.

உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.