சேதராப்பட்டு:
நடிகர் விஜய் நடித்து வெளியான சர்கார் திரைப் படத்தில் கதாநாயகன் விஜய் தனது வாக்கை செலுத்த வெளிநாட்டில் இருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து வாக்கு செலுத்த வருவார். ஒரு வாக்கின் மதிப்பு குறித்து அந்த திரைப்படத்தின் மையக் கருத்தாக இருக்கும்.
அதேபோல் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர் மேட்டு தெருவை சேர்ந்த டாக்டர் பிரதீப்குமார் என்பவர் சிங்கப்பூரில் டாக்ராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது வாக்கை செலுத்துவதற்கு விமான மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பின்னர் புதுச்சேரி கரசூர் கிராமத்துக்கு வந்த அவர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள 5-ம் எண் வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
மீண்டும் அவர் இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறார். அவர் தனது ஒரு வாக்கை செலுத்துவதற்கான விமான டிக்கெட் ரூ. 32 ஆயிரமாகும்.
இந்தத் தேர்தலில் டாக்டர் பிரதீப்குமார் போன்ற நபர்கள் தனது வாக்கின் மதிப்பை உணர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்கு செலுத்தியதின் விளைவாக ஊசுடு தொகுதியில் 94.39 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்பு எந்த தேர்தலிலும் பதிவாகாத வாக்கு சதவிகிதம் புதுச்சேரியில் இந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.