புதுச்சேரி:
மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் - பா.ஜ.க. வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வமும் போட்டியிடுகின்றனர். திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு பா.ஜ.க.வினர் அதிகளவில் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், எதற்காக நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். வாக்காளர் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றவர் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க.வினரிடம் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்க தொடங்கினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கனூர் போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.