புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த மாதம் 15-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் 16-ந்தேதியே வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், வேட்பு மனு தாக்கல் முடிந்த 23-ந்தேதி வரை ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியிலும், எதிர் அணியான காங்கிரஸ் - திமுக இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடும் முடியவில்லை.
வேட்பு மனு தாக்கல் இறுதி நாளில் தேசிய ஜனநாயக கூடடணியில் தொகுதி பங்கீடு முடிவானது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நாளில் தான் இந்தியா கூட்டணியில் தொகுதி பஙகீடு முடிவானது.
புதுச்சேரியில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜனதா, அதிமுக, லஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட்டு ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட்டு 2 தொகுதியிலும், தவெக கூட்டணி 30 தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி 28 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
புதுச்சேரி தேர்தல் களத்தில் மொத்தம் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கினர். குறைவான நாட்களே இருந்ததால் வேட்பாளர்கள் அனைவரும் காலை, மாலை என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாட்கள் குறைவாக இருந்ததால், புதுச்சேரியில் முதல்முறையாக வேட்பாளர்களின் மனைவி, மகன், மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடுஷோவும், மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, அர்ஜூன்ராம்மெக்வால், பாஜனதா தேசிய தலைவர் நிதின்நபின், தமிழக தலைவர்கள் அண்ணாமலை, குஷ்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்பி ஆகியோரும் தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம், ரோடு ஷோ, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தொகுதிக்குள் சுறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழ தொகுதியில் இருசக்கர வாகன பிரசாரம் செய்தனர். இதனால் நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவ படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126-ன் கீழ் வாக்கு பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பாக அதாவது இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது. இதனால் தொகுதிக்குள் பிரசாரம் செய்ய வந்த வெளிநபர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் யாரும் பிரசாரக் காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூப்பட்டுள்ளது.