புதுச்சேரி

3 மாதமாக வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி சட்டமன்ற வளாகம்

கடந்த மாதம் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி, பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

புதுவை பாரதி பூங்கா எதிரில் சட்டசபை வளாகம் உள்ளது.

இங்கு முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அறைகள் உள்ளது. நாள்தோறும் சட்டசபை வளாகம் காலை 9 மணி முதல் பரபரப்பாக காணப்படும். அமைச்சர்களை சந்திக்க வரும் அதிகாரிகள், எம்எல்ஏக்களை சந்திக்க வரும் தொகுதி மக்கள் என சட்டமன்றம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

கடந்த மார்ச் 14-ந்தேதி புதுவை மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் அறைகளை காலி செய்ததால், பூட்டப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய கார்கள் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தொகுதியில் பிரசாரத்துக்கும் சென்று விட்டனர்.

தேர்தல் முடிவு கடந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. அதுவரை சட்டமன்ற வளாகம் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி இருந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்தது.

கடந்த மாதம் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி, பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை.

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் நெருங்கிய நிலையில் கடந்த 3-ந்தேதி என்ஆர்.காங்கிரசை சேர்ந்த ராஜவேலு, பாஜகவை சேர்ந்த ராஜசேகர் ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து கவர்னரிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார். அவர்கள் நியமனத்திற்கு மத்திய உள்துறை அனுமதி கிடைக்கவில்லை.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு தாமதமாகிறது. இதனால் மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவியும் காலியாக உள்ளது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலும் அறிவிக்கப்படவில்லை. வரும் 15-ந்தேதியுடன் தேர்தல் தேதி அறிவித்து 3 மாதம் முடிவடைய உள்ளது.

ஆனாலும் சட்டமன்றம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மட்டும் பிற்பகலில் சட்டசபைக்கு வந்து அதிகாரிகளை சந்தித்துவிட்டு செல்கிறார். இலாகா இல்லாததால் அமைச்சர்களும் வருவதில்லை.

சட்டசபையில் உள்ள பல அறைகளும் மூடிக்கிடக்கிறது. இதனால் சட்டசபை வளாகமே தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் கடந்தும் இன்னும் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகிறது.

SCROLL FOR NEXT