புதுச்சேரி

புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்

நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று வெளியிடப்பட்டது.

உயர்வு

அதன்படி கடந்த மாதம் மொத்தம் ஜி.எஸ்.டி. ரூ.2,11,205 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.1,44,695 கோடியாக இருந்து 10.1 சதவீதமும், இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. ரூ.66,511 கோடியாக இருந்து 28.8 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் மொத்தமாக ரூ.29,968 கோடி ஜி.எஸ்.டி. திருப்பி தொகை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலவாரியான உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

புதுச்சேரியில் குறைவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜூலையில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூலாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.244 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 17 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரியின் எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.48 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. பங்கீடு செய்யப் பட்ட பின் கிடைக்கும் பிந்தைய எஸ்.ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.143 கோடியாக உயர்ந்துள்ளது.