புதுச்சேரி

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த.வெ.க.வுக்கு தாவும் பிரமுகர்கள்

த.வெ.க.வுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதுவை சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ரங்கசாமி ராஜினாமா செய்து விட்டார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிட என்ஆர்.காங்கிரசில் சீட் பெற பலரும் முயற்சித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் த.வெ.க. கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் ஆகியவை போட்டியிட்டது.

இதில் த.வெ.க. ஆதரவுடன் போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றார். தற்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது.

த.வெ.க.வுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த இடைத்தேர்தலை குறிவைத்து புதுவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் த.வெ.க.வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் த.வெ.க.வுக்கு தாவ தயாராகி வருகின்றனர்.

இன்றைய தினம் சென்னை பனையூரில் அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து அதிமுக பிரமுகரான சுத்துக்கேணி பாஸ்கர் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அவரும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில்தான் இணைந்திருப்பதாக தெரிகிறது.

இதனிடையே ஏற்கனவே புதுவை சட்டசபை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலரும் தங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர். காங்கிரசும் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.