புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் சிவா (வயது 21) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (20) மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரும் அங்கு அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்துக்கொண்டே சென்ற சிவாவை அவர்கள் வழிமறித்து ஏன் எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே செல்கிறாய். என கூறி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சிவாவை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த சிவா வலிதாங்காமல் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் சஞ்சய் குமாரும் அவரது உறவினரும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிவா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் குமார் மற்றும் அவரது உறவினரை தேடி வருகின்றனர்.