புதுச்சேரி

புதுச்சேரியில் பிரதமர் மோடி நாளை ஒரு மணி நேரம் ரோடு ஷோ- 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

நாளை மறுநாள் 4-ந்தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

புதுச்சேரி:

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்ய புதுவைக்கு வருகிறார்.

இதுகுறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4.15 மணிக்கு புதுவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அஜந்தா சிக்னல் சந்திப்பு வந்து ரோடு ஷோவை தொடங்குகிறார். அண்ணா சாலை வழியாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. துாரத்துக்கு இந்த ரோடு ஷோ சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது.

இதில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நாளை மறுநாள் 4-ந்தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 5-ந்தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதுவைக்கு வருகிறார். அவரும் மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

6-ந்தேதி புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தேர்தலில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள், தொகுதியில் என் முயற்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி ஓட்டு சேகரித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜ.க. மாநில நிர்வாகி நாகேஸ்வரன் உடனிருந்தார்.