புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டுகால கல்விச் சிறப்பு விழா டிசம்பர் 18-ந்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றுகிறார். இதற்கான அழைப்பிதழை புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வழங்கினார். அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த விழாவில் 2025-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு ஜனாதிபதியே நேரடியாக பட்டங்கள், பதக்கங்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த செய்தி குறிப்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந்தேதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் என்பதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முழு பயணத் திட்டம்- எத்தனை மணிக்கு வருகிறார், எத்தனை நாள் தங்குகிறார், வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாரா என்பது குறித்து ஜனாதிபதி மாளிகை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வழக்கமாக ஜனாதிபதியின் பயணத் திட்டம் 3 அல்லது நாட்களுக்கு முன்புதான் வெளியாகும்.
எனவே இப்போதைக்கு 18-ந்தேதி வந்து அன்றே திரும்பும் ஒரு நாள் பயணமாக இருக்க வாய்ப்பு அதிகம் என்றே கூறப்படுகிறது. புதுச்சேரியில் இரவு தங்குவாரா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. மேலும் இதுவரை வேறு எந்த நிகழ்ச்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 7,8-ந் தேதிகளில் ஜனாதிபதி முர்மு புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வந்தார். அப்போது ஜிப்மரில் புதிய லீனியர் ஆக்சிலரேட்டர் திறப்பு, குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி மணக்குள விநாயகர் கோவில், திருக்காஞ்சி கோவில் தரிசனம், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் பயணம் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அதே போல இந்த முறையும், பட்டமளிப்பு விழாவுடன் சேர்த்து வேறு நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படு கிறது. ஜிப்மர், ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம் போன்ற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவை எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.