புதுச்சேரி

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு, நேரடி கள ஆய்வு என 2 நிலைகளில் நடத்தப்படுகிறது.

இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் முதல் கட்ட பணிகள் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.

நாட்டின் திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு, நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி வரையறை போன்ற மிக முக்கியமான செயல்பாடுகளுக்கு இந்த தரவுகள் அடிப்படையாக அமையும்.

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு, நேரடி கள ஆய்வு என 2 நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலையில் பொதுமக்கள் தாங்களே https://se.census.gov.in என்ற இணை யதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யலாம்.

இந்த சுய கணக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை , சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உட்பட மொத்தம் 33 விபரங்கள் சேகரிக்கப்படும்.

2ம் நிலை கணக்கெடுப்பில் அலுவர்கள் வரும் ஜூன் 1ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நேரடியாக வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள். இதுகுறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரக இயக்குனர் சுந்தேரஷ்பாபு கூறியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ன் படி கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும்.

தவறான தகவல் வழங்குவது, பணியை தடுப்பது அல்லது ஒத்துழைக்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். பொதுமக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும். நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு துல்லியமான புள்ளிவிவரங்கள் மிக அவசியம்.

புதுச்சேரி மக்கள் அனைவரும் தேசிய பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, சரியான தகவல்களை வழங்க வேண்டும். தகவல்களை கொடுப்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசின் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது.

அரசின் எதிர்கால திட்டங்களுக்கு உதவும். ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.