புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
புதுச்சேரியோடு தேர்தல் நடத்தப்பட்ட தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் புதிய அரசுகள் அமைக்கப்பட்டு அமைச்சர்கள் பொறுப்புகளை ஏற்றனர். அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கப்பட்டு, பணிகளை தொடங்கி விட்டனர். அந்த அமைச்சர்களைக் கொண்டு, புதிய ஆட்சிகளின் தொடக்க நிலை சட்டசபை கூட்டங்களும் நடந்து முடிந்துவிட்டன.
ஆனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலோ நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. இங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் 5 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் வி.பி. சிவக்கொழுந்து, ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், பா.ஜனதா தரப்பில் நமச்சிவாயம், ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி யேற்றனர்.
இந்த 5 பேருக்கும் இதுவரையிலும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல் சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படவில்லை. இந்த இழுத்தடிப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியே காரணம் என்று கூறப்பட்டது.
இலாகாவை வெளியிடுவதில் தாமதம் காட்டியதால் பா.ஜனதா அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அதிருப்தியில் இருந்தனர்.
இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 77 நாட்களுக்கு பிறகு அமைச்சர்கள் பொறுப்பேற்று 67 நாட்களுக்கு பிறகு, கடந்த 20-ந்தேதி அமைச்சர்களின் துறைகள் அடங்கிய பட்டியலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்தார். வழக்கமாக ஒரு மணி நேரத்தில் கவர்னர் இதற்கு அனுமதி தந்து விடுவார். அதன்பிறகு அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பட்டியல் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பா.ஜனதாவுக்கு கடந்த முறை ஒதுக்கிய இலாகாக்கள் இந்த முறை ஒதுக்கப்படவில்லை. அதனால் கவர்னர் அனுமதி தருவதில் தாமதம் ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி இலாகா பட்டியல் தந்து 4 நாட்களாகியும் இன்னும் கவர்னரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காதது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாமதம் பற்றி தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. பா.ஜனதா தரப்பும் இதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறது. கேள்வி எழுப்பினாலும் இதுபற்றி பேசுவதை தவிர்க்கின்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமியும் மவுனம் சாதிக்கிறார்.