புதுச்சேரி

புதுச்சேரி நகர பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: பிரதமர் மோடி இன்று மாலை ரோடு ஷோ

ரோடு ஷோ நடக்கும் அண்ணாசாலையின் இருபுறமும் இரும்பு வேலி போட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

மீண்டும் புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கொண்டு வர பிரதமர் நரேந்திரமோடி உட்பட தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதுவை அரசு சார்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் மார்ச் 1ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, ரூ.ஆயிரத்து 572 கோடி மதிப்பில் 74 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.ஆயிரத்து 142 கோடி மதிப்பில் 19 திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எனது ஓட்டுச்சாவடி, வலிமையான ஓட்டுச்சாவடி என்ற தலைப்பின் கீழ் கடந்த 30ம் தேதி தொண்டர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து ஓட்டுகளை பெற வேண்டும், ஆட்சியின் பயனாளிகளிடம் கருத்துகேட்டு, சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக சார்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்றுமாலை புதுவைக்கு வருகிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் புதுவைக்கு பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு வருகிறார்.

அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, பாஜக தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், வேட்பாளர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ரோடு ஷோ தொடங்கும் அஜந்தா சந்திப்புக்கு பிரதமர் வருகிறார். அங்கு 4.15 மணிக்கு ரோடு ஷோ தொடங்குகிறது. அண்ணா சாலை வழியாக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களை அவர் சந்திக்கிறார். 5.15 மணிக்கு நேருவீதி சந்திப்பில் ரோடு ஷோ நிறைவடைகிறது.

சுமார் 1.5 கிமீ நடக்கும் ரோடு ஷோவையொட்டி அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதி வரை அண்ணா சாலை விழாகோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜகவினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாடிகளில் இருந்து மலர் தூவி வரவேற்கவும், ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மத்திய - மாநில நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளும் ஆங்காங்கே பிரதமரை வரவேற்று நன்றி தெரிவிக்கின்றனர். மீனவர்கள் படகுகளுடன் பிரதமரை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 அடி உயர பிரதமர் கட்அவுட்டுடன் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக அவரை வரவேற்க உள்ளனர். ரோடு ஷோவின்போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

ரோடு ஷோ நடக்கும் அண்ணாசாலையின் இருபுறமும் இரும்பு வேலி போட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களும், கண்காணிப்பு கேமிரா வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை, 20 கம்பெனி துணை ராணுவம், உள்ளூர் போலீசார் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரை வரவேற்கும் ரோடு ஷோவில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகையையொட்டி நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.