புதுச்சேரி

புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறையில் ஆன்லைன் சேவைகள் அறிமுகம்

பொது மக்கள் அருகில் உள்ள பொது சேவைகள் மையம் தங்கள் வசிப்பிடம் அருகே இருந்து சேவைகளை எளிதாக அனைத்து நாட்களிலும் பெறலாம்.

புதுச்சேரி:

புதுவையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை, புதிய ரேஷன்கார்டு பெறுவது உட்பட புதிய சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிப்பதை அறிமுகம் செய்துள்ளது.

குடிமை பொருள் வழங்கல் துறைக்கு வராமல் அருகேயுள்ள ஆதார் மையத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பொதுமக்கள், பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் பொது சேவைகள் மையம் மூலமாக பதிவு செய்ய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு துறைகளில் நேரடியாக சென்று வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. தாங்கள் வீடு அருகில் உள்ள பொது சேவைகள் மையம், இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பகளின் நிலை எஸ்எம்எஸ் மூலம் மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறிப்பாக வேளாண்துறை, போக்குவரத்துத்துறை, மீன்வளத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், கல்வித்துறை, சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மின்துறை என பலத்துறைகளில் பல சேவைகள் ஆன்லைனில் உள்ளன.

இந்த வரிசையில் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் பல சேவைகள் புதிதாக அறிமுகமாகியுள்ளது. குடிமைப் பொருள் வழங்கல்துறைக்கு வராமல் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பது, ரேஷன் அட்டையை பிரித்தல், ரேஷன் அட்டை மாற்றம் (மஞ்சள் அட்டை- சிவப்பு அட்டை), குடும்ப உறுப்பினர்கள் சேர்த்தல், நீக்குதல் ஆகிய வசதிகள் குடிமைப்பொருள் வழங்கல்துறை இணையத்தில் அறிமுகமாகியுள்ளது.

பொது மக்கள் அருகில் உள்ள பொது சேவைகள் மையம் தங்கள் வசிப்பிடம் அருகே இருந்து சேவைகளை எளிதாக அனைத்து நாட்களிலும் பெறலாம். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் விடுமுறை எடுத்து குடிமை பொருள் வழங்கல் துறைக்கு நேரில் வர அவசியம் இல்லை.

விண்ணப்பித்த பிறகு அதை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.