புதுச்சேரி

டிக்கெட் கட்டணத்தை தர மறுத்த ஆன்லைன் செயலி, சொகுசு பஸ் நிறுவனத்திற்கு அபராதம்- புதுச்சேரி நுகர்வோர் ஆணையம் உத்தரவு

வழக்கு விசாரணையில் ஆன்லைன் செயலி தங்களுக்கும் பயணிகளுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றும், தாங்கள் வெறும் ஆன்லைன் முன்பதிவு தளமாக மட்டுமே செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தது.

புதுச்சேரி நுகர்வோர் ஆணையம், ஆன்லைன் செயலி மற்றும் சொகுசு பஸ் நிறுவனங்களுக்கு ரூ.4,531 திருப்பி வழங்கவும், சேவை குறைபாட்டுக்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடும் ரூ.10 ஆயிரம் வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டது.

பெங்களூரு தேவன உள்ளியை சேர்ந்தவர் மீரா சுந்தரம்.

பஸ் டிக்கெட்டு முன்பதிவு

இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, தன்னுடன் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர், ஏப்ரல் 10-ந் தேதி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக செயலி மூலம் ஆன்லைனில் 4 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தார்.

இதற்காக ரூ.4,531 செலுத்தியுள்ளார். பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் ஏப்ரல் 8-ந்தேதி பயணத்தை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து ஆன்லைன் செயலி மற்றும் தனியார் சொகுசு பஸ் நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

பயணத்தை ரத்து செய்ததை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள், கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஒப்புக்கொண்டன. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான ரூ.4,531 தொகையை நீண்ட நாட்களாக திருப்பி வழங்காமல் 2 தனியார் பஸ் நிறுவனங்களும் காலம் தாழ்த்தி வந்தது.

இதனால் மீரா சுந்தரம் புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் ஆன்லைன் செயலி தங்களுக்கும் பயணிகளுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றும், தாங்கள் வெறும் ஆன்லைன் முன்பதிவு தளமாக மட்டுமே செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தது.

அபராதம்

ஆனால் இந்த விளக்கம் ஏற்புடையதல்ல எனக் கூறிய நுகர்வோர் ஆணையம், மீரா சுந்தரம் செலுத்திய ரூ.4,531 தொகையை திருப்பி வழங்கவும், சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறைக்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடும் ரூ.10 ஆயிரம் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என அந்த ஆன்லைன் செயலி மற்றும் பஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT