புதுச்சேரி

புதுச்சேரியில் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை 1-ந்தேதி முதல் அமல்

எழுத்துப்பூர்வ அறிவிப்பை தாசில்தார் விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவார். மனுக்கள் மீது 60 நாட்களில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

புதுவை அரசின் நில அளவை, பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் பட்டா மாறுதல், நில உட்பிரிவு மனுக்களை கையாள புதிய வழிகாட்டுதல்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலாகும். இதன்படி தாசில்தார், துணை தாசில்தார் அலுவலகத்திலிருந்து கோப்பு மறு சரிபார்ப்புக்கு அனுப்பும் முறை நிறுத்தப்படும்.

அனைத்து நில மாறுதல்களும் தாசில்தார், துணை தாசில்தார் அலுவலகத்தில் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு நில அளவீடு செய்யப்பட்டு, தொழில்நுட்ப தணிக்கை செய்யப்பட்டு நிலமகள் தரவு தளத்துடன் சரிபார்க்கப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் நேரடியாக இறுதி செய்யப்படும்.

இதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பை தாசில்தார் விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவார். மனுக்கள் மீது 60 நாட்களில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.