புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக அமைச்சர்களை வரவேற்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
தமிழகம், புதுவையில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுல் விரும்பினார். ஆனால் நம்மில் சிலர் துரதிர்ஷ்டவசமாக திமுக கூட்டணியில் நீடிக்காமல் வெளியேறினால், அது தற்கொலைக்கு சமம் என்றனர். அதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். தற்போது தற்கொலை செய்து கொண்டோம்.
இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். காங்கிரஸ் சுய பரிசோதனை செய்ய வேண்டும். நாம் ஏன் தோற்றோம்? என்பது குறித்து நாம் ஆராய வேண்டும். புதுவையில் நாம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், திமுக நாம் வெற்றி பெறும் தொகுதிகளை தரவில்லை. அதனாலேயயே நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவை பல வளர்ச்சியை சந்தித்தது. பலமுறை புதுவையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சில முறை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தது.
ஆனாலும், அப்போதும் நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா காலத்தில் புதுவைக்கு பல திட்டங்களை காங்கிரஸ் கட்சி அளித்தது. ஒரு காலத்தில் புதுவை காங்கிரசாரை பார்த்து தமிழக காங்கிரசார் பொறாமைப்படும் நிலை இருந்தது.
புதுவையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைந்து இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா வழங்கவில்லை. புதுவை கேட்பாரற்று கிடக்கிறது. 2 மாதமாக யாருக்கு எந்த இலாகா என தெரியாத நிலை தொடர்கிறது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அவரிடமிருந்து என்.ஆர்.காங்கிரசும், பாஜகவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புதுவையில் 5 மாதமாக இலவச அரிசி வழங்கவில்லை. அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதற்கு யாரும் பதில் கூறுவதில்லை.
2011ல் தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்தார். அதிமுக, பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அப்போது புதுவையில் காங்கிரசுக்கு 10 இடம்தான் தருவோம் என ஜெயலலிதா கூறினார்
அப்போது நானும், வைத்திலிங்கமும் முடிவெடுத்து காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் 11 இடங்களில் வெற்றி பெற்று சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தோம். புதுவையில் தற்போது குறைபிரசவ ஆட்சி அமைந்துள்ளது. இது நீண்டகாலம் நீடிக்காது.
அதிகார போட்டியாலும், பங்கு பிரிப்பதிலும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே மோதல் உள்ளது. 2 மாதத்திலேயே இந்த கூட்டணியை மக்கள் வெறுத்துவிட்டனர். தமிழகம், புதுவையில் இணைந்து செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.