புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் மார்டின் குழுமம் மற்றும் மார்டின் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதில் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டனர்.
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் குத்து விளக்கேற்றி வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். முன்னதாக மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொதுச்செயலாளர் ராம் குமார், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, வக்கில் பிரபாகரன், நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகன்தாஸ், மார்டின் குழுமத்தின் சி.எஸ்.ஆர். மேலாளர்கள் ஜான்பால், திவாகரன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் வசிக்கும் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று பணிபுரிகின்றனர். அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதத்தை அந்த மாநிலத்திலேயே செலவிடுகின்றனர்.
புதுவைக்கு பெரிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் புதுவை இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாமை மார்டின் குழுமம் நடத்துகிறது.
சுமார் 3000 பட்டதாரி இளைஞர்கள் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதே போல் 3 மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துவோம். புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி உள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் மிக மிக தாமதமாக பணிகள் நடந்து வருகிறது.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியே இப்போதுதான் ஒதுக்கி உள்ளார்கள். தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பேசியது கூட இன்னும் அரசு இதழில் வெளியிடப்படவில்லை. தற்போது புதுச்சேரியில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திறந்தவெளியில் கழிவுநீர் வாய்க்கால் ஓடுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.