புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறிதல் என்ற பயிற்சியை ஓட்டல் சன்வேயில் நடத்தியது.
இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அலுவலர் வீரேந்திர சாம்பியால் பேசியதாவது:-
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுவை இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் வகையில், சாலை பாதுகாப்பை அதிகரித்து, பயண நேரத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் ஒரு தொடர் மாற்றத்தக்க நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
புதுவையில் என்எச் 32, 332 மற்றும் 332A ஆகியவற்றை உள்ளடக்கிய 38 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. புதுவையில் ரூ.ஆயிரத்து 619 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சென்னை-புதுவை வழித்தடம் வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாறும்.
மாமல்லபுரம் மற்றும் புதுவைக்கு இடையேயான 108 கி.மீ நீளமுள்ள என்எச் 332A வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை 61 கி.மீ துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது 2 தொகுப்புகளாக ரூ.2 ஆயிரத்து 477 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணி மார்ச் 2027க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் முதல் புதுவை வரையிலான மீதமுள்ள 46 கி.மீ தூரம், அதில் 34 கி.மீ புதுவை பைபாஸ் உட்பட ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் வரும் அக்டோபரில் தொடங்கும்.
இந்த பணிகள் முடிந்தவுடன் கிழக்கு கடற்கரை வழித்தடம் வழியாக சென்னை-புதுவை பயண நேரம் சுமார் 4 மணி நேரத்தில் இருந்து 2 1/2 3 மணி நேரமாக குறையும். புதுவையில் உள்ள நகர்ப்புற போக்குவரத்து நெரிசலும் குறையும். சென்னை- நாகப்பட்டினம் பயண நேரம் 2½ மணி நேரம் வரை குறையும்.
180 கி.மீ நீளமுள்ள விழுப்புரம்-புதுவை-நாகப்பட்டினம் வழித்தட பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும், சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயண நேரம் தற்போதுள்ள 7½ மணி நேரத்தில் இருந்து தோராயமாக 5½ மணி நேரமாக குறையும்.
மேலும் ஜிப்மர் எதிரே பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் லிபட் வசதியுடன் ரூ.2.24 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதுவை NH-32-ன் நகர்ப்புறத்தை 3 கி.மீ அழகுபடுத்த ரூ.4.23 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதுவை இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜிவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் 3.88 கி.மீ நீள உயர்மட்ட பாலம் கட்ட ரூ.436 கோடிக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டது. கட்டுமான பணி விரைவில் தொடங்கி 30 மாதங்களில் முடிக்கப்படும்.
இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் பிராந்திய இணைப்பை ஆதரிக்கும் பாதுகாப்பான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.